உலகம் முழுவதும் twitter பயன்படுத்தும் 40 கோடி பேரின் பர்சனல் கணக்குகள் திருடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது 40 கோடி டுவிட்டர் தரவுகளை ஹேக்கர் ஒருவர் திருடி விற்பனைக்கு வைத்துள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், உலக சுகாதார நிறுவனம், நாசா, அரசு நிறுவனங்கள், அமைப்புகள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் தகவல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 40 கோடி பேரின் ட்விட்டர் கணக்குகளை திருடிய நபர் டார்க் வெப்பில் அதை விற்பனைக்கு வைத்துள்ளதாக கூறி, அதில் சில மாதிரி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளமான முகநூலில் 53 கோடி பேரின் தகவல்கள் திருடு போனதற்காக மெட்டா நிறுவனம் 2200 கோடி அபராதம் செலுத்தியது. இதை நினைத்து பார்த்து என்னுடன் பேரம் பேச வாருங்கள் என்று ஹேக்கர் எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் டுவிட்டர் நிறுவனம் இதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் இஸ்ரேலிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.