லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் ஊராட்சியில் பாபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் சுரேஷ் என்பவர் தினக்கூலி அடிப்படையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாபுவிடம் மனு கொடுத்துள்ளார்.
அப்போது 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் என சுரேஷ் மனுதாரரிடம் கேட்டுள்ளார். அதன்படி 18 ஆயிரம் ரூபாய் பணத்தை google.pay மூலம் மனுதாரர் சுரேஷுக்கு அனுப்பியுள்ளார். மேலும் மனுதாரர் சென்னையிலிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபு மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.