கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பெண் பயிற்சியாளர்களை கூகுள் நியமித்துள்ளது
உலக அளவில் பிரபலமான நிறுவனமான கூகுள், இந்தியாவில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை வழங்க, கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு அது தொடர்பான சுகாதார ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள பெண் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “முதல் கட்டமாக கூகுள் மேப் மூலம் இந்தோனேசியாவில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையத்தை கண்டுபிடிக்க உதவினோம். அதன் பின்னரே கொரியா, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு சேவையை கூகுள் நிறுவனம் விரிவுபடுத்தியது. கூகுளின் அமைப்பு மூலம் தவறான தகவல்களை எப்படி கண்டறிவது என்பது குறித்து வாராவாரம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா தொற்றினால் அதிகப்படியான மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனை சரிசெய்ய கூகுள் துணைநிற்கும்” என கூறினார். கொரோனா தொற்றினால் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவ கூகுள் தங்களால் முடிந்த முயற்சியை எடுத்து வருகின்றது.