இடத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து ராம்நகரில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் சுந்தர். இவர்கள் வீட்டு அருகே பாலகிருஷ்ணன் அவரது மகன் சேது ராமலிங்கம் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இரு குடும்பத்திற்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் திடீரென கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதில் மாரியப்பன், அவர் மகன் கிருஷ்ண சுந்தர், அவருடைய மகள் வெள்ளச்சி, ஸ்ரீதேவி ஆகிய 4 பேரும் ஒரு கோஷ்டியாகவும், பாலகிருஷ்ணன், அவர் மகன் சேதுராமலிங்கம், உறவினர் வெள்ளத்துரை, ஆகிய மூவரும் ஒரு கோஷ்டி ஆகவும் மோதினர்.
உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் கிருஷ்ணசுந்தர், மாரியப்பன், வெள்ளத்துரை ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். எதிர்தரப்பில் சேதுராமலிங்கம் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணசுந்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.