இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து நேற்று வெளியேறிய நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்த அவர், அந்நாட்டில் தங்கக்கூடிய கால அவகாசம் முடிந்ததால் அங்கிருந்து நேற்று வெளியேறி விட்டார்.
இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார். தாய்லாந்து அரசு, தற்காலிகமாக அவர் தங்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் மூன்று மாதங்கள் தங்க அனுமதி அளித்திருப்பதாகவும், அதன் பிறகு அவர் வேறு நாட்டிற்கு சென்று விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறது.