அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தொடர்ந்து 3-வது நாளாக தனது தலையில் சேலையால் முக்காடு போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு எங்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும், மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், ஓய்வூதியம் பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் கடந்த 26 ஆம் தேதி தொடங்கப்பட்ட மூன்று நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு தனது குடும்பத்தைப் பிரிந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கியுள்ளார்.