பணியின்போது ஏற்படும் காயத்திற்கு அரசு மருத்துவ செலவை ஏற்காது என்று ஆர்டிஐ கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை பதில் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வந்த காலத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது வீடுகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சூழ்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து மக்களுக்காக சேவை செய்து கொண்டிருந்தார்கள்.
மக்களுக்காக உழைக்கும் காவல்துறையினருக்கு ஒரு சில அத்தியாவசிய உதவிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் உள்ளது. அதன்படி, காவலர்கள் பணியின் போது படுகாயமடைந்ததற்கான மொத்த செலவினங்களையும் அரசு ஏற்க வேண்டும் என்ற விதியோ நடைமுறையோ இல்லை என்று தகவல் உரிமை சட்டத்தின்(RTI) கீழ் கேட்கப்பட்டதற்கு காவல்துறை பதில் அளித்துள்ளது.
மேலும் மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ குழு பரிந்துரையின் பேரில் 24 மாதங்கள் விடுப்பு, சிறப்பு இயலாமை விடுப்பிற்கு நான்கு மாதங்கள் முழு சம்பளமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர்கள் காவலர்களுக்கு போதுமான விடுமுறையும், மருத்துவ உதவியும் அரசு சார்பில் செய்து தரப்படவேண்டும்.
பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் மிகுந்த மன ரீதியான அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கும், அவர்கள் சேவை செய்யும் பொதுமக்களுக்கும் நல்லதல்ல. எனவே காவல்துறை அதிகாரிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்கான நடைமுறைகளையும் அரசு கையாள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.