Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்… ஆர்பாட்டத்தில் அரசு ஊழியர்கள்… 158 பேர் அதிரடி கைது…!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகளாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராம நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கியுள்ளார். மாவட்ட செயலாளர் சேகர், மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர் இளவேனில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 158 பேரை தர்மபுரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |