தஞ்சை – மதுரை 165 கிலோ மீட்டர் தூரம் மாற்றுத்திறனாளி ஒருவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தேவி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. ராஜா தனது இடது காலை 26 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் இழந்து விட்டார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன் தான் அவரால் நடக்க முடியும். இந்நிலையில் தனக்கு விபத்து இழப்பீடு வழங்கக்கோரி மதுரை கோர்ட்டில் விபத்து நடந்த ஓராண்டிலேயே அவர் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் வழக்கு நிலுவையில் அப்படியே விடப்பட, அவர் மேல்முறையீடு ஏதும் செய்யவில்லை. இதையடுத்து தற்போது அவரது நண்பர் ஒருவரது உதவியுடன் மீண்டும் அந்த வழக்கை மேல்முறையீடு செய்ய முன்வந்துள்ளார். கடந்த மார்ச் மாதமே இதற்கான நடை முறையைச் செயல்படுத்த இருந்த நிலையில், ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பொறுமையாக காத்திருந்தார் ராஜா.
தற்போது ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் பொறுமையை இழந்த ராஜா, தன்னம்பிக்கையை இழக்காமல் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தவர், தனது ஒற்றை காலுடன் கிட்டத்தட்ட 165 கிமீ சைக்கிளில் பெடல் மற்றும் பேலன்ஸ் செய்து மதுரை வரை பயணம் மேற்கொண்டு, வழக்கறிஞரிடம் வழக்கிற்கான ஆவணங்களை கொண்டு கொடுத்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக, தயவுசெய்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தாமாக முன்வந்து மாற்றுத்திறனாளி ராஜாவுக்கு உதவுமாறு தொடர் வேண்டுகோள்களை கருத்துக்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.