திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
கொரோனா தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான உதவிகளை திமுகவினர் செய்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கான நிவாரணத் தேரை அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒற்றுமை எண்ணமே இல்லாத முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது கெட்ட வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.
பக்குவம் பெறாத அரசியலுக்கு தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் மக்கள் பணியை தடுக்கும் உள் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அனைத்துக் கட்சி கூட்டம் பாதுகாப்பு விதிகளுடன் நடைபெறும் என திமுக உறுதியளித்தும், தலைமைச் செயலகத்தில் பல்வேறு கூட்டங்கள் நடத்திய அதிமுக அரசு காவல்துறை மூலமாக அனுமதி மறுத்துள்ளது. நாளை நடைபெறவிருந்த அதே கூட்டம் ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நடக்கும் என ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.