கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு அம்மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு அம்மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. டெல்லியில் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு பதிவு செய்யப்படுகிறது.
ஆனால் ஒருவர் தனது விரல் மூலம் பதிவு செய்யும் உபகாரணத்தில், மற்றொருவர் தனது கை விரலை வைக்கும் சமயம், தற்போது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒருவருடன் தொடர்புகொண்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் எச்சரிக்கை அடைந்துள்ள அரசு, கொரோனா வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .