உத்தரவை நிறைவேற்றாததால் நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிளியகவுண்டன்பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இவரின் மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ராஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து ராஜாவின் குடும்பத்தை சேர்ந்த சுகந்தி, ரகுபதி, சிங்கராஜ் ஆகியோர் இழப்பீடு வழங்கக்கோரி மோட்டார் வாகன விபத்து விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ராஜாவின் குடும்பத்தினருக்கு 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஆனாலும் இழப்பீடு தொகையை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து 26 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகும் இழப்பீடு தொகையை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் 11-டி அரசு பேருந்து ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.