தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு பரிசோதனை கருவிகளான ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கருவிகள் எத்தனை வந்துள்ளது? என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கருவிகளை வாங்கிய விலை, எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
சத்ததீஷ்கர் மாநிலத்தில் கருவிகள் வாங்கிய விவரத்தை அம்மாநில அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சத்தீஷ்கர் மாநிலத்தை போல தமிழக அரசும் பரிசோதனை கருவிகள் வாங்கிய விவரத்தை தெரிவிக்க வேண்டும். மேலும் நாடே உயிருக்காக போராடி வரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை கணக்கில் வைத்து திசை திருப்பும் நோக்கில் ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா குறித்த தகவல்களை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என தெரிவித்த அவர், தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசின் நடவடிக்கையை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. கொரோனா தடுப்பு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் அவசியமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார்.