தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் டெஸ்ட் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது குறித்து இன்று செய்தியலாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 இலிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். ஈரோட்டை சார்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் உயிரிழப்பும் 10 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு என்பது ஒரு மாநிலம் சார்ந்த விஷயம் அல்ல, நாடு தழுவிய விஷயம். அப்படி செய்தால் தான் கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கு குறித்து பிரதமர் சொல்லும் அறிவிப்பை முற்றிலும் கடைபிடிப்போம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும் அவர் தமிழகத்துக்கு வர வேண்டிய ரேபிட் கிட் டெஸ்ட்க்கள் அமெரிக்காவுக்கு திருப்பி விடப்பட்டு விட்டன. சீனாவில் மத்திய அரசு ஆர்டர் கொடுப்பதற்கு முன்னதாகவே தமிழகத்தின் சார்பில் 50 ஆயிரம் ரேபிட் கிட்ஆர்டர் கொடுக்கப்பட்டது. 4 லட்சம் கிட்டுகளை ஆர்டர் கொடுத்து உள்ளோம் . இந்தியாவுக்கு வந்தது பிறகு முதற்கட்டமாக தமிழகத்திற்கு தான் 50,000 ரேபிட் கிட்டுகள் வரும். தமிழகத்தின் ஆர்டர் அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்டு விட்டதால் தான் தாமதமாகிறது என்று தெரிவித்தார்.