Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பட்டினிச்சாவுகள் ஏற்படாமல் தடுக்க அரசு திட்டமிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனாவின் இறுதி விளைவாக பட்டினிச்சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள்.

இது இன்றைய நெருக்கடியான காலத்தின் இன்றியமையாத் தேவை என்பதை அனைவருமே உணர்ந்து நடந்து வருகிறார்கள். நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வது போலவே, உணவுத் தட்டுப்பாடின்றி காக்க வேண்டியதும் அவசியம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது; அச்சுறுத்திக் கொண்டே வருகிறது.

குறிப்பாக, உணவுப் பொருட்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30% உயர்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. காய்கறிகளின் விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதாலும், இறைச்சி விலையும் அதிகரிப்பதாலும் மக்களின் அன்றாட உணவுத் தேவைக்குரிய அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்த விலையேற்றம் இடைத்தரகர்களுக்கும் பதுக்கல்காரர்களுக்கும் கொள்ளை லாபம் அடிக்கவே வழிவகுக்கும். காரணம் நெல் உள்ளிட்ட தானியங்களையும், காய்கறிகளையும் விளைவிக்கும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதால் அவர்களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை தொடருகிறது.

சிறு வணிகர்கள் – காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி லாப நோக்கத்துடன் செயல்படக்கூடியவர்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

Categories

Tech |