ஜப்பான் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் நாட்டிற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அதேபோல் இங்கிலாந்திலும் ஒமிக்ரான் கொரோனா தொற்று இரண்டு பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பல உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் ஜப்பான் அரசு தங்கள் நாட்டிற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தடை விதித்துள்ளது.
மேலும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இதுகுறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்காக ஜப்பானில் திறந்து வைக்கப்பட்ட எல்லை போக்குவரத்து மீண்டும் “ஒமிக்ரான்” பரவல் காரணமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜப்பானில் தென்னாபிரிக்கா உட்பட ஏழு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளிநாட்டு பயணிகள் ஜப்பானுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.