அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே 17ம் தேதிக்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 50 சதவீத ஊழியர்களுடன் 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்துள்ளது. தலைமை பதவியில் இருப்பவர்கள் 6 நாட்களும் வேலைக்கு வர வேண்டும். சுழற்சி முறையில் ஒரு குழு, 2 நாட்கள் பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர்.
அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும், தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என கூறப்பட்டுள்ளது. பணிக்கு தேவை என அழைக்கப்படும் எவரும், அலுவலகம் வர வேண்டும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாறிமாறி அலுவலகம் வந்து பணிபுரிவார்கள். தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது