அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது மற்றும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க தேவையான விவரங்கள் இந்த செயலியில் இருப்பதால் அனைத்து துறை செயலர்கள், ஆட்சியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப முதன்மை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் அனைத்து அரசு பணியாளர்களும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா என்று மக்கள் தங்களைத் தாங்களே சுயமாகப் பரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த செயலி உதவும். இந்த செயலியை ஸ்மார்ட்போனில் நிறுவிய பின்னர் மொபைல் போனுக்கு அருகே உள்ள இதர கருவிகளை ஆரோக்கிய சேது செயலி கண்டறியும். ஒருவர் மற்றவர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள். தொடர்பு கொண்டிருக்கிறார்கள். எந்த புளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். கணிப்பு நெறிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இது கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.