ஆசிரியர்கள் பாடங்களை விரைந்து முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஆயத்த பணியில் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல், சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறையில் அமர்ந்து இருக்க வேண்டும்.
இதனையடுத்து பாடங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறும்பொழுது மாணவர்களுக்கான பாதுகாப்பை அனைத்து பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும், பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தினமும் தெளிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு மாணவர்களின் உடல் வெப்பநிலையை உடல் வெப்ப பரிசோதனைக் கருவி மூலம் கண்டறிந்தும், கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமி நாசினி மற்றும் சோப்புகளை பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர் மாணவர் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், இறைவணக்கப் கூட்டம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும், எந்தவித விளையாட்டு பயிற்சிக்கு மாணவர்களை அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உடனே முதல் நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் பணியாளர்களை பற்றிய சுகாதார விளக்க குறிப்பு தயாரிக்க வேண்டும் எனவும் அதில் அவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் பள்ளி வளாகத்திற்குள் பொருட்களை விற்க வெளிவிற்பனையாளர்களை அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளார். அதோடு முடிந்தவரை குளிர் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் பள்ளி மற்றும் விடுதியில் ஒரு நபர் நோய் தொற்றுடன் கண்டறியப்பட்டால் அவரை வீட்டுக்கு அனுப்பாமால், தனிமைப்படுத்தப்பட்டு மேல் நடவடிக்கைக்காக சுகாதார அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.