தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களான செந்தில்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் வந்த போது எங்களின் படகுகள் சேதமடைந்ததால் அரசு நிவாரணத் தொகையாக தலா 12,000 மற்றும் 17,000 ரூபாயை வழங்கியது. இதனால் இவர்கள் 2 பேரும் கூடுதல் நிவாரணத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது அரசு தரப்பில் இருவரின் படகுகளும் சிறிதளவில் சேதம் ஆனதாகவும் அதற்குரிய நிவாரணம் அப்போதே கொடுக்கப்பட்டு விட்டதால் கூடுதல் நிவாரணம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டது.
இதற்கு நீதிபதிகள் இயற்கை பேரிடர் என்பது யாரும் கணிக்க முடியாத ஒன்று. எனவே இயற்கை பேரிடர் சேதங்களை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அரசு தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது என்றார். கடந்த 2019-ம் ஆண்டு இயற்கை பேரிடர் நிவாரணத் தொகையை அரசு உயர்த்தியுள்ளதால், ஒரு படகு முழுமையாக சேதமடைந்தால் 1.50 லட்ச ரூபாயை முழுமையாக அரசு வழங்க வேண்டும். இழப்பீடு என்பது சட்டபூர்வமானது. அது நன்கொடை கிடையாது. எனவே மனுதாரர்களுக்கு முறையாக தலா 1.38 லட்ச ரூபாய் மற்றும் 1.33 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை 8 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.