கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தது.
அவர்கள் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் இன்று காலை அவர்கள் அனைவரும் பாரிசுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக 112 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பாரிசுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 183 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.