Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி… பெண் டாக்டர் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை… முடிவே இல்லாது நீளும் நிர்பயாக்களின் பட்டியல்..!!

ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் பிரியங்கா, இரவு பணி முடித்து வழக்கம் போல, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷாத்நகர் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் டயர் பஞ்சராகியுள்ளது.

இதனால் பதற்றமடைந்த பிரியங்கா, தனது தங்கை பவ்யாவுக்கு ஃபோன் செய்து, தனது வண்டி பஞ்சராகியதாகவும், அதனை ஒரு லாரி ஓட்டுநர் சரிசெய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் இருக்கும் பகுதியில் சந்தேகப்படும்படியான சிலர் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து பவ்யா பிரியாங்காவிடம், அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, தங்கை பிரியங்காவை தொடர்புகொள்ள முயற்சிக்கவே, அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. பவ்யா மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்காததால், விஷயத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக, காவல் நிலையத்தை அணுகிய அவர்கள், தன் மகளைக் காணவில்லை என்று புகாரளித்தனர்.

பிரியங்காவைக் காணாமல் அவரது பெற்றோர் தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஷாத்நகர் மேம்பாலத்திற்குக் கீழே அடையாளம் தெரியாத பெண் சடலம், எரிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக அவ்வழியே சென்ற பால்காரர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றினர்.

மேலும், பிரியங்கா காணவில்லை என்று அவர் குடும்பத்தார் அளித்திருந்த புகார் ஷாத்நகர் காவல் துறையினருக்குத் தெரியவந்த பின், அவரின் தங்கை பவ்யாவை அழைத்து சென்று எரிந்த நிலையிலிருந்த உடலைக் காண்பித்துள்ளனர்.

உடலைக் கண்ட பவ்யா, பிரியங்கா அணிந்திருந்த விநாயகர் படம் பொறித்த செயினை வைத்து, அது பிரியங்கா தான் என்று உறுதி செய்தார். தன் அக்காவின் உடலைப் பார்த்து, பவ்யா கதறி அழுத காட்சி அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. பின்னர், பிரியங்காவின் உடலை உடற்கூறாய்வு செய்ததில், அவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

விவகாரத்தின் தீவிரத்தன்மையை அறிந்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து, அம்மாநில காவல்துறை தேடி வந்தது. இந்நிலையில், பிரியங்காவின் வாகனத்திற்கு பஞ்சர் பார்த்ததாகக் கூறிய, லாரி ஓட்டுநரையும், கிளினரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். முழு விசாரணைக்குப் பிறகே என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியவரும் என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. தன் மகளை அநியாயமாக பறிகொடுத்த பெற்றோர் குற்றவாளிகளை உடனே கைது செய்து கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று கண்ணீருடன் மன்றாடி கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

முற்றுப்புள்ளியே இல்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இதற்கான கடுமையான சட்டங்களை உருவாக்கி பாலியல் குற்றங்களை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரியங்காவின் படுகொலை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலையும் ஆதங்கத்தையும்   தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Payal_Rohatgi/status/1200262161232203777

Categories

Tech |