இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர்கள் 6 பேரையும் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு இருந்த ஆதாரங்களை வைத்து தான் விடுவித்ததாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நீதிபதிகளின் இந்த தீர்ப்பில் கவர்னரின் அதிகாரம் குறித்த முக்கிய கருத்தையும் தெரிவித்துள்ளனர். அதாவது மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்ளாமல் அவர் ஆற்ற வேண்டிய கடமையை உணராமல் நடந்து கொண்டதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே நீதிபதிகளின் கருத்தை ஏற்று தன்னுடைய தவறை உணர்ந்து ஆளுநர் பதவி விலகுவதே இந்த தருணத்தில் சரியான ஒன்றாக இருக்கும்.
இந்நிலையில் வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினி மற்றும் முருகன் தவிர மற்ற 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை வேறு ஏதாவது ஐரோப்பிய நாடுகளுக்கோ அல்லது இலங்கைக்கோ மீண்டும் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். ஒருவேளை அவர்கள் 4 பேரும் தமிழகத்தில் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என்பதை ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். மேலும் கவர்னர் அவர்கள் இந்த தீர்ப்பை மனதில் வைத்துக் கொண்டு தமிழக அரசு வழங்கியுள்ள சட்ட மசோதாக்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.