தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலினும் திமுக அரசின் நிர்வாக திறமையும் தான் என்று ஓபிஎஸ் கடுமையாக விளாசியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் குடும்ப நலன்கள் மட்டும் தான் மேம்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு காரணம் திமுக அரசின் சுயநலம் மட்டும் தான். கடந்த 2011-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது அரசு கேபிள் டிவி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததோடு, மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்காக நிறைய சேனல்களை ஒளிபரப்பவும் வழிவகை செய்தார். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொய்யான வாக்குறிதிகளை கூறி ஆட்சியில் அமர்ந்து விட்டது.
திமுக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தனியாரை தலைவராக நியமித்து அரசாணை வெளியிட்டது. அந்த நாள் முதற் கொண்டு அரசு கேபிள் டிவிகளின் சேவை சரிவர கிடைப்பதில்லை எனவும், சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு கேபிள் டிவி சேனல்களை பார்க்க முடியாமல் அனைத்தும் முடங்கி போய் இருக்கிறது.
இதற்கான காரணம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு கூட தெரியாத நிலையில் அவர்கள் அனைவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்கள். இது குறித்து கேபிள் டிவி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனியார் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும், 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்த பிறகு பழையபடி சேனல் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்திற்கும் திமுக அரசின் நிர்வாக திறமையின்மை மட்டும் தான் காரணம். எனவே அரசு கேபிள் டிவி சேனல்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறைந்த செலவில் அனைத்து சேனல்களையும் பொதுமக்கள் கண்டுகளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனச் சேவைகளை முடக்கியுள்ள மக்கள் விரோத திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்! pic.twitter.com/4SKBw4HKHu
— O Panneerselvam (@OfficeOfOPS) November 21, 2022