பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் தங்குவதற்கான விடுதிகள் வரும் 11ம் தேதி முதல் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்காக வரும் 11ஆம் தேதி விடுதிகள் திறக்கப்பட இருப்பதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “தமிழகம் முழுவதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ஆம் தேதி முதல் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் வரும் 11ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
விடுதிகள் திறக்கப்பட இருப்பதால் 2019-20 கல்வி ஆண்டில் விடுதியில் தங்கிப் படித்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுத வரும் போது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளாமல், விடுதியில் தங்கி தேர்வை எழுதி கொள்ளலாம். மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி இருப்பதால் தினமும் காலை மாலை என இரண்டு வேளை விடுதியை நன்றாக சுத்தம் செய்வதோடு அவர்களின் உடல் வெப்பத்தை தினமும் இரண்டு வேளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்யப்படவேண்டும் .
மாணவ மாணவிகள் கிருமிநாசினி சோப்பு ஆகியவற்றை போதுமான அளவில் வைத்துக் கொண்டு உணவு உட்கொள்ளும் முன்பும், தேர்வு எழுதி முடித்து விடுதி திரும்பும் போதும் கைகளை நன்றாக கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம் செய்துவிட்டு உள்ளே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு விடுதியில் இருக்கும் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து இருப்பதையும் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றுவதும் விடுதியில் இருக்கும் காப்பாளர்கள் நிச்சயம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்தும் மாணவ மாணவிகள் வருவதால் அவர்களுக்கு விடுதியில் தனியாக இடத்தை ஒதுக்கி விடவேண்டும். அதோடு விடுதியிலிருந்து தேர்வு எழுத பள்ளிக்கு மாணவ மாணவிகள் செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளையும் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.