Categories
மாநில செய்திகள்

ஜூலை 2வது வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தலாமா?… பிற்பகலில் பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

இன்றைய விசாரணைக்கு அரசு தலைமையில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்றால் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடை விதிப்பது தொடர்பாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த அடிப்படையில் 9 லட்ச மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க உள்ளீர்கள் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 35,000 கொரோனா பாதிப்பில் சுமார் 25,000 பேர் சென்னையில் மட்டும் உள்ளனர். எனவே ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வாதம்:

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் இளங்கோ, தேர்வுகளுக்கு முன்பாக மாணவர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பு எடுக்கப்பட வேண்டும் எனவும், குறைந்தது 15 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க மத்திய அரசு கடந்த மே 13ம் தேதி அறிவித்த நிலையில், தற்போது அவசர அவசரமாக தமிழக அரசு 10ம் வகுப்பு தேர்வினை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் வாதாடினார். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் சுமார் 30% மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வினை எதிர்கொள்ள உள்ள நிலையில், தற்போது நடைபெற உள்ள தேர்வினை ஜூலை மதத்திற்காவது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

அரசு தரப்பு வாதம்:

அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கை தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதாடவுள்ளதாகவும், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மாணவர்களின் நலனில் அரசு முழுமையான அக்கறை கொண்டிருப்பதாகவும், மாணவர்களுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் வாதாடினார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி:

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் லட்சக்கணக்கான மாணவர்களின் நலனில் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்? கேள்வி எழுப்பினர். மேலும் தேர்வினை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கலாமே? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறீர்கள்? எப்படி தேர்வினை நடத்த போகிறீர்கள்? என பல்வேறு கேள்வி எழுப்பினர்.

மாணவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ஏற்கனவே 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் முடிவடைந்து விட்டதாகவும், ஓரிரு தேர்வுகள் மட்டுமே தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்வுகளை நடத்த தயாராக உள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் டாஸ்மாக் கடைகள் திறப்பதும் பள்ளி தேர்வும் வேறு வேறானவை எனவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைப்பது குறித்து அரசே முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலை 2வது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |