கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து நமது ஸ்மார்ட் போன்களின் பேமெண்ட் செயலிகளின் வாயிலாக மிக எளிதாக உடனே பணம் செலுத்தலாம். தற்போது ஏராளமான இடங்களில் இத்தகைய டிஜிட்டல் பேமெண்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணப் பரிவர்த்தனைக்காக ஒட்டப்பட்ட QR Code ஸ்டிக்கர் மீது மர்மநபர்கள் நள்ளிரவில், போலியான ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் திருடுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்துள்ளது.
திருப்பூரை அடுத்த முதலிபாளையத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவர் ஹோட்டல் மற்றும் ஃபாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக துரைசாமி கடைக்கு ஒரு நபர் சாப்பிடுவதற்காக சென்றார். இதனையடுத்து அந்த நபர் சாப்பிட்டுவிட்டு, அங்கு ஒட்டி இருந்த QR கோடை ஸ்கேன்செய்து பணம் அனுப்பியுள்ளார். இதனிடையில் அந்த பணம் துரைசாமியின் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்று தெரிந்தது.
இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை அந்த நபர் ‘ஸ்கேன்’ செய்தபோது QR கோடில் ஹோட்டல் பெயர் இல்லாமல், வேறு பெயர் வந்துள்ளது. இது குறித்து துரைசாமியிடம் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த துரைசாமி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து கடையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை சோதித்து பார்த்ததில் QR ஸ்டிக்கரின் மேல், வேறு ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை துரைசாமி பார்த்ததில், நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒருவர் “ஸ்டிக்கர்” மீது, QR Code மட்டும் வெட்டி ஒட்டிவிட்டுச் செல்வது தெரிந்தது. இதேபோன்று அருகே உள்ள மற்றொரு ஹோட்டல், மளிகை கடை என்று பல்வேறு கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. பணப் பரிவர்த்தனைக்கான QR Code-ஐ கடையின் வெளியே ஓட்டுவதைத் தவிர்க்குமாறும், அடிக்கடி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை சோதித்துக் கொள்ளுமாறும் வியாபாரிகளை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.