தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பணப் பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் 15 பறக்கும் படைகளும் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கும்படையினர், காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சோதனை சாவடி மற்றும் சாலைகளில் வரும் கார் போன்ற வாகனங்களில் சோதனை செய்கின்றனர்.
இந்நிலையில் நெல்லையில் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் பறக்கும் படை வாகனங்களில் இருப்பிடத்தை கண்டறியும் பொருட்டு அந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜி.பி.எஸ் கருவியானது நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து பறக்கும்படை குழுவிற்கு உடனடியாக தெரிவிக்கும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பர்.