7ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள 35,208 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்த உள்ளது. அதில் 24,605 பணியிடங்கள் பட்டதாரிகளுக்காகவும், 10,603 பணியிடங்கள் இளங்கலை படித்தவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் தேர்வுகள் இந்திய ரயில்வே தேர்வு செய்யும் ஏஜென்ஸிகள் மூலம் நடத்தப்படும். அந்த ஏஜென்ஸிகள் அனைத்தும் டென்டர் மூலம் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைக்கு இணையான சலுகைகள் வழங்கப்படும்.
டிஏ, ஹெச்ஆர்ஏ, போக்குவரத்து சலுகை, ஓய்வூதிய திட்டம், மருத்துவ சலுகைகள் மற்றும் இதர சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். இதில் டைப்பிங் தெரிந்த கிளெர்க், டைப்பிங் மற்றும் அக்கவுண்ட்ஸ் தெரிந்தவர்கள், சரக்கு ரயில் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும். ரயில்வேயின் விதிகள் குறித்து http://www.rrbcdg.gov.in/ இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, பொதுப்பிரிவினருக்கு 18 -33, ஓபிசி பிரிவினருக்கு 18-36, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 18-38. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் திறமையை பொறுத்து பதவி உயர்வு வழங்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.