நாற்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு மற்றும் தரங்கம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாடை பரசலூர், மேமாத்தூர், கீழமாத்தூர், செம்பனார்கோவில், காலகஸ்தி, நாதபுரம், ஆறுபாதி, விளநகர், இலுப்பூர், சங்கரன்பந்தல் போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் அப்பகுதி விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தனர். தற்சமயத்தில் நாற்றங்கால்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நடவு செய்யும் பருவத்திற்கு வந்துள்ளது.
அதனால் மேல் குறிப்பிட்ட பகுதிகள் அனைத்திலும் நடவு செய்யும் பணி எந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் நடைபெற்று வருகின்றது. மேலும் கோடை காலத்தில் உழவு செய்வதால் மண்ணின் வளம் பெருகும், நீர் பிடிப்புத் தன்மை அதிகமாகும், கூட்டுப்புழுக்கள் அழிந்து நிலத்தின் வேர்ப்பகுதி காற்றோட்டமாக இருக்கும். இதனால் பயிர்கள் நன்கு செழித்து வளரும். மேலும் கோடை மழை பெய்ய இருப்பதால் நெல் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.