கூலிப்படையை ஏவி தாத்தா தனது பேரனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் விஜயராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி விஜயராகவன் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயராகவன் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் விஜயராகவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது தனது தாத்தாவான முருகன் என்பவரது வீட்டில் தங்கியிருந்த விஜயராகவன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததோடு, திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். மேலும் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் கோபமடைந்த முருகன் கூலிப்படையை சேர்ந்த திருப்பதி மற்றும் கனகராஜ் போன்றோரை அணுகி தனது பேரனான விஜயகுமாரை கொலை செய்யும்படி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து திருப்பதியும், கனகராஜும் இணைந்து விஜயராகவனை மதுகுடிக்க வைத்ததோடு, அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் முருகன், கூலிப்படையை சேர்ந்த கனகராஜ் மற்றும் திருப்பதி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.