புதுக்கோட்டையில் ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாமல் மூதாட்டி தவித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் வடகாடு பெண்கள் தங்கும் விடுதி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். பொது மக்கள் விசாரணை செய்த போது திருச்சியிலுள்ள உணவகத்தில் வேலை பார்ப்பதாகவும் சொந்த ஊரான பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூருக்கு செல்ல புதுக்கோட்டை வரை பேருந்தில் வந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து காவல் துறையினர் லாரி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர் வடகாடு பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அங்கிருந்து தன் சொந்த ஊரான மதுக்கூருக்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் ஊரடங்கால் மூதாட்டி அவதிப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.