சென்னையில் கணவன்-மனைவி இருவரும் பொங்கல் பரிசு வாங்க சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் பெண் லாரி டயரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியை அடுத்த சர்மா நகரை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கு மொத்தம் மூன்று மகள்கள். அதில் இரண்டு மகள்கள்களுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில், ஒரு மகளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது குடும்பம் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கல் பகுதிக்கு குடியேறினர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசை வாங்க செல்வதற்காக மனைவி மகாலட்சுமியுடன் தனது இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்பொழுது சாம்பல் லோடுகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மகாலட்சுமி கீழே விழ லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.