தஞ்சாவூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பாக காந்தி சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சுற்றியுள்ள விவசாயிகள் தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 55 வயதை கடந்த வேளாண் தொழில் சார்ந்தவர்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும்,
பயிர் கடன் ரத்து செய்தும், பயிர் நகைகடன் மானியத்தை 9.25 சதவீதமாக உயர்த்தி வழங்க கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்த மத்திய அரசை கண்டித்தும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருட்களுடன் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் சின்னதுரை தலைமை தாங்க நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டபடி கலந்து கொண்டனர். பின் ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அருகிலிருந்த காந்தி சிலையிடம் சென்று மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர்.