இந்துக்களை பற்றி இழிவாக பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்து மதத்தைப் பற்றியும், இந்து பெண்களைப் பற்றியும் தவறாக பேசிய திமுக எம்பி ராசா மீது மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் புதுச்சேரியில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் ஆனது இந்து முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெறுகின்றது.காலை ஆறு மணியிலிருந்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இந்த போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது.
இதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள தேரடி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாமல் இருக்கிறது. தமிழக அரசு பேருந்துகள் மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலிருந்து புதுச்சேரி வந்த இரண்டு பேருந்துகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பேருந்துகள் என மூன்று பேருந்துகளின் மீது மர்ம நபர்களால் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் முக்கிய பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.