விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருவதால் டெல்லியில் பெரும் பததர்மமான சூழல் நிலவி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வோமே தவிர இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று போராட்டம் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் அங்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. வியாழக்கிழமைக்குள் காலி செய்யாவிட்டால் அவர்கள்பலப் பிரயோகம் செய்யபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் போராட்டம் நடைபெறும் இடத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று போராட்டம் நடைபெற்ற இடத்தில் மர்ம கும்பல் விவசாயிகளின் மீது கற்களை கொண்டு தாக்கி, கூடாரத்தை கலைக்க முற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.