கிரீஸ் அரசு தடுப்பூசி, செலுத்தாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.
கிரீஸ் நாட்டில் சமீப தினங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. நேற்று 4608 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை 53% நபர்கள் தடுப்பூசி எடுத்துள்ளார்கள். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை 70%-ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது.
மேலும், இதற்கென்று புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியிலிருந்து கிரீஸில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ரத்து செய்யவும், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவை 10 யூரோக்கள் கட்டணம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தையும் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், தேவைப்படும் பட்சத்தில் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகளின் மூலமாக நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.