கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டின் பிரபல சுற்றுலா தீவான கிரீட்டில் 6.3 ரிக்டரில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிரீட் தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள Palekastro கிராமத்தில் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட கிரீட் தீவின் கிழக்கில் கட்டிடங்கள் ஏதும் சேதமடைந்துள்ளதா என போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் சோதனை செய்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிரீட் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மூன்று வாரங்களுக்கு முன்பும் இதேபோல் கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது ஒருவர் உயிரிழந்தார். மேலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்ததும் நினைவுக் கூரத்தக்கது ஆகும்.