Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா யுத்தம்…. மளிகைக் கடைக்காரரின் வியக்கத்தக்க செயல்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனவை தடுக்க வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கும் ரூபாய் நோட்டுகளை வியாபாரி கிருமிநாசினியில் சுத்தம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்

உலக நாடுகளில் பரவத்  தொடங்கிய கொரோனா  தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகின்றது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தியாவசிய  பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் வந்து செல்கின்றனர். மேலும் நோய் பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வெளியில் வருபவர்கள் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள், பிளாஸ்டிக்குகளில்  7 நாட்கள் வரை கொரோனா  தொற்று இருக்குமெனவும், காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் 3 மணிநேரத்திற்கு குறைவாகவும் கொரோனா  உயிரோட இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்துவிட்டு பணம் வாங்கிய பின்னர் கைகளை சுத்தம் செய்து வருகின்றனர். ஆனால் ஒரு வியாபாரி ஒரு படி மேலே சென்று வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிய ரூபாய் நோட்டுகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகிறார். பிற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவத்தை பார்க்கும்பொழுது ஆச்சர்யம் ஏற்படுகின்றது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையத்தில் இருக்கும் பாரதி மளிகை கடை உரிமையாளர் சேகர். கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க இவர் வலியுறுத்தி வருகிறார். அதோடு கடைக்கு பொருள் வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்கின்றார். இவர் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் சில்லரை மற்றும் பணம் போன்றவற்றை கிருமி நாசினியால் கழுவி அதனை உடனடியாக காயவைத்து மற்றவர்களுக்கு சில்லரை கொடுக்கும் பொழுதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொடுக்கின்றார்.

அதேபோன்று மாவட்ட நிர்வாகம் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் பொதுமக்களுக்கு அட்டைகள் வழங்கியுள்ளது. இந்த அட்டைகளைப் பயன்படுத்தி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பொருட்களை வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேகரும் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி எனது கடையை நடத்தி வருகிறேன். முகக்கவசம்  அணிந்து வந்தால் மட்டுமே பொருட்களை வழங்குவேன். கொரோனா யுத்தத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது நமது தலையாய கடமை” என்றார்.

Categories

Tech |