16 மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை மத்திய மாநில அரசுகள் கூட்டாக கடன் பெறும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு பொது நிதியில் சேர்த்து நடவடிக்கை எடுத்தது. இதனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை கிடைக்காமல் நிதி நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து கடன் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 16 மாநிலங்களுக்கு 6,000 கோடி ரூபாய் கடனாக பெறப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கடனுக்கு 5.19 சதவீதம் வட்டி விதிக்கப்படும் என்றும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் மாநில அரசுகள் கடனை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.