நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குகிற நிலையில், 11 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஹால் டிக்கெட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவத்தில் உள்ள பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மை உடைய தண்ணீர் பாட்டில் மற்றும் 50 மில்லி அளவுக்கு கிருமி நாசினி கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கட்டாயம் முகக்கவசம் அணியவும், 6 அடி இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்கும்வரை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.