நிலம் தொடர்பாக இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தில் டீர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் விரவல் பன்டகி கிராமத்தில் நிலம் மற்றும் சாலை அமைப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை தீர்ப்பதற்காக அங்கு பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு குழுக்களும் நிலம் தொடர்பான கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வாக்குவாதமானது முற்றியதுடன் இரு குழுக்களும் தங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சட்டில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.