போலீஸ் நிலையத்தில் மேஜையில் வைக்கப்பட்ட துப்பாக்கி திடீரென வெடித்ததில் காவல் நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வடக்கு காவல் நிலையம் உள்ளது. அங்கு விருதம்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வடக்கு காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது ஜெகதீசன் அவரது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கு உள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் திடீரென துப்பாக்கி வெடித்தது.
ஆனால் அதிலிருந்து வந்த குண்டு யார் மீதும் பாயாது மேற்கூரையை துளைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கி வெடிச் சத்தத்தை கேட்ட மற்ற போலீசார் பதட்டம் அடைந்தனர். ஆனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதால் அனைவரும் சற்று நிம்மதியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மேஜையில் துப்பாக்கியை வைக்கும்போது அது வெடிக்க காரணம் என்ன என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.