ஜம்மு -காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டும், அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவரும் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஃகனி ஹமாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை மாநில போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF) வீரர்களுடன் அப்பகுதிக்கு சென்று, இரவு 7.30 மணியளவில் அவர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கிய போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்களும் பதிலுக்கு சுட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டை அதிகாலை 3.30 மணி வரை நீடித்ததில், லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மொமின் கோர்ஜி என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக அம்மாநில காவல்துறை உறுதியாக கூறியுள்ளது. அதேநேரத்தில், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு சிறப்பு போலீஸ் அதிகாரி பிலால் அகமது வீர மரணம் அடைந்து விட்டதாகவும், உதவி ஆய்வாளர் அமர்தீப் பரிஹார் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.