Categories
தேசிய செய்திகள்

நண்பர்களே…. அதிகமாக உச்சரித்த மோடி…. என்ன பேசினார் தெரியுமா ? முழு தொகுப்பு உங்களுக்காக …!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொளி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது  அவர் பேசும் போது,

என் அன்புக்குரிய நாட்டு மக்களே வணக்கம்… கொரோனா பெருந்தொற்றுக்கெதிரான போரில் நாம் தற்போது unlock  இரண்டிற்கும் நுழைந்து இருக்கிறோம். அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் காலத்திற்குள் நாம் நுழைந்து இருக்கிறோம். இதன் காரணமாக உங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நண்பர்களே…. கொரோனாவின் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை உலகின் பல்வேறு நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா நல்ல இடத்திலேயே உள்ளது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் இதர முடிவுகள் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளன. அதேசமயம் அன்லாக் ஒன்றிலிருந்து தனிப்பட்ட மற்றும் சமூக நடத்தையில் அதிகரிக்கும் அலட்சியத்தையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

சட்டத்தை விட மேலானவர் :

முழு கவசங்கள் அணிதல், சமூக விலகல் மற்றும் 20 நொடிகளுக்கு கைகளை கழுவுதல் ஆகியவற்றில் முன்பு நாம் மிகவும் கவனமாக இருந்தோம். ஆனால் இன்று நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நேரத்தில் அதிகரிக்கும் அலட்சியம் வருத்தமளிக்கிறது. நண்பர்களே பொது முடுக்கத்தின் போது விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் ஆகியோர் தற்போது அதே எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக நாம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். விதிகளைப் பின்பற்றாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு எச்சரிக்கை படவேண்டும். நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். பொது இடங்களில் முகக் கவசங்கள் அணியாததற்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு ரூபாய் 13,000 அவதாரம் விதிக்கப்பட்டது. இந்தியாவிலும் உள்ளாட்சி நிர்வாகம் அதே உற்சாகத்தோடு பணிபுரிய வேண்டும். 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கை இதுவாகும். ஊராட்சி தலைவரோ, பிரதமரோ இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாருமில்லை.

நண்பர்களே… யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது தான் பொது முடக்கத்தின் போது உச்சகட்ட முன்னுரிமையாக இருந்தது. யாரும் பசியோடு படுக்கைக்குப் போக கூடாது என்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், குடிமை சமூகம் ஆகியவை தங்களால் முடிந்தவரை செய்தன.  தேசமாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் அறிவுப்பூர்வமான முடிவுகள் எந்த நெருக்கடியையும் எதிர்த்துப் போரிட நமது சக்தியை அதிகரிக்கின்றன.

அந்த வகையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன் பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.75 லட்சம் கோடி மதிப்பிலான தொகுப்பு ஏழைகளுக்காக வழங்கப்பட்டது.

நண்பர்களே… கடந்த மூன்று மாதங்களில் ரூபாய் 31 ஆயிரம் கோடி மதிப்புள்ள நேரடி பலன் பரிவர்த்தனைகளை 20 கோடி ஏழை குடும்பங்கள் பெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 18 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது. அதேசமயம் கிராமப்புற பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு வேலைவாய்ப்பு திட்டம் வேகமாக தொடங்கப்பட்டது. இதற்காக அரசு ரூபாய் 50,000 கோடி செலவிடுகிறது.

நண்பர்களே… ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய மற்றொரு விஷயமும் பேச வேண்டியுள்ளது. இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டன. குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். கூடுதலாக ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு ஒரு கிலோ பருப்புகளை இலவசமாக பெற்றது. ஒரு வகையில் அமெரிக்காவின் மக்கள் தொகையை விட 2.5 மடங்கு அதிகம்…  இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட 12 மடங்கு அதிகம்…  ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமான மக்களுக்கு நமது அரசு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது.

நண்பர்களே…! இது தொடர்பான ஒரு பெரிய அறிவிப்பை நான் இன்று செய்கின்றேன். நண்பர்களே நமது நாட்டில் மழை காலத்தின்போதும், அதற்கு பிறகும் வேளாண்மையில் பல செயல்பாடுகள் இருக்கின்றன. இதர துறைகளில் அதிக செயல்பாடுகள் இருக்காது. பண்டிகை காலத்தில் தொடக்கத்தையும் ஜூலை குறிக்கிறது. ஜூலை 5ல் குரு பூர்ணிமா ஆகும். அதன் பின்னர் ஆடி மாதம் ஆரம்பிக்கிறது. அதற்கு பிறகு ஆகஸ்ட் 15 வருகிறது. பின்னர் ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகியவை தொடர்கின்றன. அதைத் தொடர்ந்து கட்டி பிஹு, நவராத்திரி,  துர்கா பூஜை ஆகியவையும் உள்ளன.இவற்றை தொடர்ந்து தசரா தீபாவளியும் சட் பூஜாவும் வருகின்றன.

80 கோடி மக்களுக்கு இலவசம்:

இந்த பண்டிகை காலங்கள்  தேவைகளையும், செலவுகளையும் அதிகரிக்கச் செய்கின்றன. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பிரதமர் ஏழைகள்  நல உதவித் திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரையில் அதாவது தீபாவளி மற்றும் சத் பூஜையை நிறைவேறும் வரையிலும் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் இந்த திட்டம் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்ட உள்ளது.

80 கோடி  ஏழை சகோதர சகோதரிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு அரசு இலவச உணவு பொருட்களை வழங்க உள்ளது. குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். நீடிக்கப்ட்டும் இந்த பிரதமர் ஏழைகள் நல உதவித் திட்டத்திற்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை:

கடந்த மூன்று மாதங்களாக இந்த திட்டத்திற்காக செலவழிக்கப் பட்டு வந்த தொகையுடன் சேர்த்து மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். நாடு முழுவதற்குமான ஒரு கனவை நாம் கண்டு வருகிறோம். அதில் சில மாநிலங்கள் மிகச் சிறப்பாக பணி புரிந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் இதை முன்னெடுத்துச் செல்ல நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். அது என்னவாக இருக்கும் என்று நீங்கள் வியப்படையலாம். அது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்ற கோரிக்கையாகும். இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பெருமளவு பயனடைவார்கள்.

நண்பர்களே… அரசு இன்று தேவைப்படுவோருக்கும், ஏழை மக்களுக்கும் இலவச உணவு பொருட்களை வழங்க முடிகிறது என்றால் அதற்கு இரண்டு தரப்பினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முதலாவதாக கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகள். இரண்டாவதாக நேர்மையான முறையில் வரி செலுத்தும் நமது நாட்டு மக்கள் ஆகிய இரு தரப்பினரே அரசின் இந்த முன் முயற்சிக்கு காரணமாக விளங்குகிறார்கள். உங்களுடைய கடுமையான உழைப்பும்,  அர்ப்பணிப்பு உணர்வும் தான் இந்த அரிய செயலைச் செய்ய உதவியுள்ளன. தேசத்தின் உணவுப்பொருள் கிடங்குகளை நீங்கள் கடுமையான உழைப்பால் நிறைத்து இருக்கிறீர்கள் .

அதனால் ஏழை மக்கள், பணியாளர்கள் ஆகியோரது சமையலறைகளில் உணவு கிடைக்க ஏதுவாக உள்ளது. நேர்மையான முறையில் வரி செலுத்தியதன் காரணமாக நீங்கள் இந்த நாட்டுக்காக கடமையை ஆற்றி உள்ளீர்கள். அதனால்தான் இந்த நாட்டில் ஏழை மக்கள் வெற்றிகரமாக இத்தகைய மிகப்பெரும் இடர்பாடுகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது. இந்த தேசத்தின் மக்களின் சார்பாக வரி செலுத்துவோருக்கும்,  விவசாய பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

நண்பர்களே… வரும் காலங்களில் ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் பின்தங்கிய பிரிவினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்வோம். அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பொருளாதார நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வோம். சுயசார்பு இந்தியாவை படைப்பதற்காக நாம் தங்குதடையின்றி உழைப்போம். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்காக நாம் குரல் கொடுப்பதையும் தொடர்வோம். இந்த லட்சியத்துடன் உறுதியோடும் நாட்டின் 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

முன்னேற்றத்தை நோக்கி நடை பயில வேண்டும். நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்றும், மூன்று அடி தூர சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும்,  முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும்  நான் மீண்டும் ஒரு முறை உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். உங்களிடம் மன்றாடுகிறேன். தயவுசெய்து அலட்சியமாக இருக்க வேண்டாம்.இந்த கோரிக்கையோடு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Categories

Tech |