பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது,
உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரமிது. நம்மை நாமே சுய தனிமைப் படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். அதிலும் பத்து வயதிற்கு கீழிருப்பவர்களையும், முதியோர்களையும் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டிய நேரமிது.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் இருமல் தும்மல் வரும்பொழுது உள்ளங்கையால் வாயை மூடுவதை விட கைக்குட்டை உபயோகப்படுத்துங்கள். கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதும் கூட்டத்தைக் கூட்டுவதை தவிர்ப்பதும் நல்லது. அருகில் இருக்கும் சுகாதார மையங்கள் குறித்து தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு இருமல், தும்மல் போன்றவை இருந்தால் சுகாதார மையத்தை அணுக உதவிகரமாக இருக்கும். வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த காரணத்திற்காகவும் பதட்டமும் பயமும் வேண்டாம். தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பாதீர்கள். அது அனைவருக்கும் பயத்தைக் கொடுக்கும். பதட்டமில்லாமல் இந்த சூழலை கையாளுவது அவசியம்.