செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், லிங்காயத்திற்கு நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்கிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன் வரவேண்டும் என்று பெரியார் பேசியதை, அம்பேத்கர் பேசியதை, அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். அதைத்தான் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து சொல்கிறோம், நானும் அதை பேசி இருக்கிறேன்.
ஆனால் இவர்கள் சனாதனிகள், குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? சூத்திரர்களாக இருப்பவர்கள் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். எச். ராஜா சூத்திரரா என்ற கேள்வியை எழுப்ப கடமைப்பட்டிருக்கிறோம். உங்கள் நம்பிக்கையான வர்ணாஸ்ரம தர்மத்தின் படி ஹெச். ராஜா சூத்திரரா? சூத்திரர் அல்லாத எச். ராஜா அவருக்கு ஏன் இதில் ஆத்திரம் வருகிறது?
ஆ. ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரர்களை பார்த்து சொல்கின்ற கருத்து, நான்கு வர்ணங்களில் நாலாவது வர்ணமாக இருக்கின்ற, கீழ் சாதி என்று சொல்லப்படுகின்ற தலித் அல்லாத, பழங்குடியினர் அல்லாத,பிராமணர் அல்லாத, சத்திரியர் அல்லாத, வைத்தியர் அல்லாத, பிறவினரை, உழைக்கும் பாட்டாளிகளை பார்த்து மனுதர்மம் உன்னை இப்படி சொல்கிறது. இதை ஏற்றுக் கொள்கிறாயா? என்று அவர் கேள்வி எழுப்புகிறார் என தெரிவித்தார்.