ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சைபர் கிரைமின் ஒரு பகுதியான சைபில் (CYBLE) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 26 கோடியே 7 லட்சம் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பிறந்த தேதி, முகநூல் கணக்கு போன்றவை ரூபாய் 41,500 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களது கடவுச்சொல்லை ஹேக்கர் விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது சைபில் (CYBLE).
இதனை குறித்து கவலைப்பட வேண்டாம் என கூறிய ஃபேஸ்புக், மூன்றாம் தர செயலிகள் மூலமாக தகவல்கள் வெளியாகி இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் கோடிக்கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அமைப்புகளை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சைபில் (CYBLE) பரிந்துரைத்துள்ளது.
இதனை பொருட்படுத்தாத பயனர்களின் தகவல்கள் திருடு போவதற்கான சூழல் உள்ளது என அந்நிறுவனம் தெளிவாக தெரிவித்துவிட்டது. ஃபேஸ்புக் மட்டுமன்றி கடந்த வாரம் ஜூம் (ZOOM) செயலி மூலமாக காணொளி அழைப்பு கூட்டங்களில் கலந்து கொண்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.