ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி தீவு ஆகும். அந்த தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள், கோவில்கள் மற்றும் கடைகள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும் இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி வெளி வர முடியாமல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2189 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து 300க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஹைதியின் முக்கிய பகுதியில் உள்ள 48 குடியிருப்புகள் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்து கட்டிடங்கள் இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு தரைமட்டமாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த மீட்புக்குழுவினர் கட்டிடங்கள் இடிந்து விழுந்த பகுதிகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்துக் கொண்டே வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் மீட்பு குழுவினரால் எடுக்கப்படும் சடலங்கள் அழுகி நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.