மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணிக்கலாம். அதன்படி அழகர் கோவில், ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், கீழ்குயில்குடியில் உள்ள புராதன சின்னங்கள் ஆகியவற்றை 15 நிமிட பயணத்தில் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 29ஆம் தேதி வரையில் மட்டுமே முதல் கட்டமாக இந்த சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு பயணிகளின் வருகையை பொருத்து இந்த சேவை மேலும் நீட்டிக்கப்படும் என அந்த தனியார் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.